Header Ads Widget

Responsive Advertisement

இஸ்ரேல் நாட்டின் வரலாறு


இஸ்ரேல் நாட்டின் வரலாறு கிட்டத்தட்ட 4000 வருடங்களுக்கு முன்பு இறைவனின் திருச்சித்தப்படி தேராகின் மகனாகிய‌ ஆபிரகாம் ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு தற்போது இஸ்ரேல் என்றழைக்கப்படுகிற கானான் தேசத்தை கி.மு.2161 ல் வந்தடைந்தார். ஆபிரகாமின் மகன் ஈசாக்கு. ஈசாக்குக்கு இரண்டு மகன்கள்: ஏசா மற்றும் யாக்கோபு. ஈசாக்கின் இளைய மகன் யாக்கோபின்மேல் கடவுள் பிரியமாக இருந்தது மட்டுமன்றி அவனுக்கு இஸ்ரேல் என்றும் பேரிட்டார்.


"அப்போது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்." - ஆதியாகமம் 32:28


யாக்கோபின் வம்சா வழியினர் இஸ்ரவேலர் என்று அழைக்கப்பட்டனர். இதில் யாக்கோபின் 12 மகன்களில் ஒருவராகிய‌ யூதாவின் வம்சா வழியினர் யூதர்கள் என்றழைக்கப்படுகின்றனர். கானான் தேசத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை அடுத்து இஸ்ரவேலர் கி.மு.1871ம் ஆண்டில் எகிப்துக்குச் சென்றனர்.


கிட்டத்தட்ட 400 வருட காலங்கள் எகிப்திலிருந்த இஸ்ரவேலர் எகிப்தியரால் அடிமைகளாக நடத்தப்பட்டனர். இதையடுத்து கி.மு.1441ம் ஆண்டில் மோசே தலைமையில் இஸ்ரவேலர் எகிப்தை விட்டு வெளியேறி கானான் தேசத்தை நோக்கிச் சென்றனர். சீனாய் வனாந்திரம் வழியாகச் சென்ற அவர்கள் 40 வருட்ங்களுக்குப் பிறகு கி.மு.1400ம் ஆண்டில் யோசுவா தலைமையில் கானானுக்குள் சென்றனர். கானானியரை வெற்றி கொண்ட இஸ்ரவேலர் அத்தேசத்தில் குடியேறினர். கானான் தேசம் இஸ்ரேல் தேசம் என்றழைக்கப்படலாயிற்று. இந்தக் கானானியர் தற்போது பாலஸ்தீனர் என்றழைக்கப்படும் கூட்டத்தினர் அல்ல என்பதை நினைவிற் கொள்க. இப்படி 4000 வருடங்களுக்கு முன்பு யூதர்களின் மூதாதையாரான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோர் குடியிருந்த தேசத்தை, 3400 ஆண்டுகளுக்கு முன்பு யூதர்களின் முன்னோர்கள் மறுபடியும் குடியேறிய தேசத்தை யூதர்களுக்குச் சொந்தமானதல்ல என்று இஸ்லாமியர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பதை அறிந்து கொள்ளமுடியும்.


தொடக்கத்தில் நியாயாதிபதிகளால் நிர்வகிக்கப்பட்ட இஸ்ரேல் தேசம், கி.மு.1020 முதல் ராஜாக்களால் ஆளப்பட்டது. இஸ்ரேல் ராஜாக்களில் மிக முக்கியமானவர்கள், முதல் அரசனான சவுல், இஸ்ரேலை வலிமை வாய்ந்த நாடாக மாற்றிய தாவீது மற்றும் தாவீதின் மகனும் மிகுந்த‌ ஞானமுள்ளவருமான‌ சாலமோன் ஆகியோர். ஜெருச‌லேம் ஆல‌ய‌த்தைக் க‌ட்டிய‌வ‌ர் சால‌மோன் என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. அத‌ன்பிற‌கு இஸ்ரேல் நாடு இர‌ண்டாக‌ப் பிரிந்து ச‌மாரியாவைத் த‌லைந‌க‌ராக‌க் கொண்டு இஸ்ரேல் என்றும் ஜெருச‌லேமைத் த‌லைந‌க‌ராக‌க் கொண்டு யூதேயா என்றும் இரு நாடுக‌ளாக‌ நிர்வ‌கிக்க‌ப்ப‌ட்ட‌ன‌.


கி.மு.722ம் ஆண்டு இஸ்ரேல் நாடு அசீரிய‌ர்க‌ளால் அழிக்க‌ப்ப‌ட்ட‌து ம‌ட்டும‌ன்றி அத‌ன் குடிம‌க்க‌ளும் சித‌ற‌டிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். கிட்ட‌த்த‌ட்ட‌ நூறு வருட‌ங்க‌ளுக்குப் பிற‌கு பாபிலோனால் யூதேயா பிடிக்க‌ப்ப‌ட்ட‌து. யூதேயாவின் குடிம‌க்க‌ள் நாடு க‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ன‌ர். கி.மு.586ல் ஜெருச‌லேம் ஆல‌ய‌ம் பாபிலோனியர்களால் இடிக்க‌ப்ப‌ட்ட‌து.


பெரும்பாலான யூதர்கள் பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். ஐம்பது வருடங்களுக்குப் பின்பு, பெர்சிய அரசர் சைரஸ், பாபிலோனியாவைக் கைப்பற்றினார். அவர் யூதர்களுக்கு மீண்டும் ஜெருசலேத்தை நிர்மாணிக்கும் அனுமதியை அளித்து, அதில் குடியிருக்கும் உரிமையையும் வழங்கினார்.


கி.மு.538ல் கிட்டத்தட்ட 50,000 யூதர்கள் செருபாபேல் தலைமையில் இஸ்ரேலுக்குத் திரும்பினர். பின்னர் எஸ்ரா தலைமயில் இன்னொரு கூட்டம் யூதர்கள் நாடு திரும்பினர். கி.மு.520-515ல் ஜெருசலேம் ஆலயம் இரண்டாவது முறையாகக் கட்டப்பட்டது. கி.மு.333ல் அலெக்ஸாண்டரின் படைகளால் கைப்பற்றப்பட்ட இஸ்ரேல் கி.மு.63 வரை கிரேக்கர்களின் பிடியில் இருந்தது. டைட்டஸ் தலைமையிலான ரோமப் படை கி.மு.63ல் ஜெருசலேம் நகரைப் பிடித்தது. கி.பி.70ல் ஜெருசலேம் ஆலயம் ரோமானியர்களால் மீண்டும் இடிக்கப்பட்டது. ஜெருசலேம் நகரை ஏலியா கேபிடோலினா என்று பெயர் மாற்றிய ரோமர்கள் கி.பி.313 வரை இஸ்ரேலை ஆண்டனர். கி.பி.313 முதல் 636 வரை பைசாண்டிய அரசால் ஆளப்பட்ட இஸ்ரேல் கி.பி.636ல் அரபியர்கள் வசம் வந்தது. பைசாண்டிய அரசர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காலிஃப் அப்டெல் மாலிக் ஆலயம் இடிக்கப்பட்ட இடத்தில் டோம் ஆஃப் தி ராக்-ஐ கட்டினார். இவ்வாறாக‌ யூதர்களின் ஆலயம் இருந்த இடத்தில் முஸ்லீம்களின் வழிபாட்டுத்தலம் அமைக்கப்பட்டது.


கி.பி.1099 முதல் 1291 வரை சிலுவைப்போர் வீரர்கள் வசமும் கி.பி. 1291 முதல் 1516 வரை மம்லுக் அரசின் வசமும் இஸ்ரேல் நாடு இருந்தது. 1516 முதல் 1918 வரை ஓட்டோமான் அரசர்கள் இஸ்ரேலை ஆண்டனர். சுல்தான் சுலைமான் காலத்தில் (1520-1566) பழைய ஜெருசலேமின் சுவர்கள் மீண்டும் கட்டப்பட்டது. 1799ல் ஃப்ரான்ஸின் நெப்போலியன் போனபார்ட் காசா நகரைக் கைப்பற்றி ஜெருசலேமை நோக்கி விரைந்தார். யூதர்களை ஃப்ரான்ஸ் படையினரின் உளவாளிகள் என்று சந்தேகித்த முகமதியர்கள் அவர்களை அழிக்கத் திட்டமிட்டனர். இதற்கிடையில் திடீரெனத் தன் திட்டத்தை மாற்றிய நெப்போலியன் ஜெருசலேமைத் தாக்காமல் திரும்பிச் சென்றார். யூதர்கள் இறைவனிடம் செய்த மன்றாட்டு தான் இதற்குக் காரணம் என்று கருதப்படுகிறது. 1909ல் டெல் அவிவ் நகரம் (Hill of Spring) அமைக்கப்பட்டது. இந்ந‌கரம் தான் பின்னர் இஸ்ரேலின் தலைந‌கராகியது என்பது குறிப்பிடத்தக்கது. 1917ல் முதலாம் உலகப்போர் தொடங்கியது. ஆலன்பை தலைமையில் பிரிட்டிஷ் படைகள் எகிப்திலிருந்து சீனாய் பாலைவனம் வழியாக ஜெருசலேம் நோக்கி விரைந்தன. அக்டோபர், 1918ல் ஜெருசலேம் நகரை வெற்றி கொண்ட பிரிட்டிஷ் படைகள் நகரின் புனிதத் தன்மை கருதி கால்னடையாகவே நடந்து நகருக்குள் சென்றனர். இந்த வெற்றியை யூதர்கள் தங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றியாகக் கருதினர். பின்னர் 1948 வரை இஸ்ரேல் பிரிட்டன்வசம் இருந்தது.


இப்படியாகப் பல்வேறு காலக்கட்டங்களில் பல நாட்டு அரசர்களால் ஆளப்பட்ட இஸ்ரேலை சுதந்திர நாடாக்கி சிதறடிக்கப்பட்ட யூதர்கள் எல்லாம் அங்கு ஒன்றுகூடி வாழவேண்டும் என்ற எண்ணம் மட்டும் யூதர்கள் மத்தியில் இருந்து கொண்டே வந்தது. இந்த எண்ணம் சீயோனிசம் என்ற யூத தேசிய விடுதலை இயக்கத்தின்மூலம் உத்வேகம் பெற்றது. சீயோன் எனப்படுவது ஜெருசலேமில் உள்ள ஒரு மலை ஆகும். 1882 முதல் 1903 வரை ஏராளமான யூதர்கள் முக்கியமாக ரஷியாவிலிருந்து இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தனர். இந்த சம்பவம் முதல் அலியா என்றழைக்கப்படுகிறது. 1897ல் யூத நாட்டின் ஆன்மீகத் தந்தை என்றழைக்கப்பட்ட தியோடர் ஹெர்சல் ஸ்விட்சர்லாந்தில் பேசல் என்ற இடத்தில் முதல் சீயோன் மாநாட்டைக் கூட்டி யூத மக்களுக்கான புதிய‌தொரு நாட்டை அமைக்க யூதர்களுக்குள்ள உரிமையைப் பிரகடனம் செய்தார். 1904 முதல் 1914 வரை இரண்டாவது கட்டமாக யூதர்கள் ரஷியா மற்றும் போலந்திலிருந்து குடிபெயர்ந்தனர். இது இரண்டாவது அலியா என்றழைக்கப்படுகிறது.


ஒட்டோமான் அரசின் இறுதிப்பகுதியில் துருக்கிய‌ர்க‌ளுக்கு முன்னுரிமை கொடுக்க‌ப்ப‌ட்ட‌தால் அர‌பிய‌ரிடையே அதிருப்தி ஏற்ப‌ட்ட‌து. ஓட்டோமான் அர‌சிட‌மிட‌மிருந்து சுத‌ந்திர‌ம் வாங்கிக் கொடுக்க‌ப்ப‌டும் என்ற‌ வாக்குறுதியை ந‌ம்பி யூதர்களும் அரபிகளும் முத‌ல் உல‌க‌ப்போரில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட‌ நேச நாடுகளுக்கு ஆத‌ர‌வ‌ளித்த‌ன‌ர். இதனால் அர‌பு தேசிய‌ம் அமைக்க‌ப்ப‌ட‌வேண்டும் என்ற‌ எழுச்சி ஏற்ப‌ட்ட‌து. பாலஸ்தீனத்திலுள்ள‌ அரேபிய‌ர்க‌ளுக்கும் யூத‌ர்க‌ளுக்கும் ப‌கைமை வ‌ள‌ர்ந்த‌து.


நவம்பர் 2, 1917ல் இஸ்ரேல் நாட்டை ஏற்படுத்துவதற்கு பிரிட்டிஷ் அமைச்ச‌ரவையால் அங்கீகரிக்கப்பட்ட பிரகடனம் ஆர்தர் ஜேம்ஸ் பல்ஃபோர் என்பவரால் வெளியிடப்பட்டது. பல்ஃபோர் பிரகடனம் என்றழைக்கப்பட்ட இந்த பிரகடனம் யூதர்களுக்கு தனி நாடு அமைப்பதற்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. 1919 முதல் 1923 வரை மூன்றாவது கட்டமாக யூதர்கள் ரஷியாவிலிருந்து குடியேறினர். இது மூன்றாவது அலியா என்றழைக்கப்படுகிறது. 1922ல் பிரிட்டன் Mandate for Palestine என்றழைக்கப்படும் தனி இஸ்ரேல் நாடு அமைக்கும் அதிகாரத்தை வழங்கியது. 1924 முதல் 1932 வரை யூதர்கள் நான்காவது அலியா கால கட்டத்தில் போலந்திலிருந்து குடிபெயர்ந்தனர்.


முதல் உலகப்போருக்குப் பிறகு பாலஸ்தீனத்திற்கு வந்து குடியேறிய யூதர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்து. மேலும் மோசமடைந்து வந்த உலகளாவிய பொருளாதார சூழலாலும் வேறுபல காரணங்களாலும் அரபியர்களும் பெருமளவில் வர ஆரம்பித்தனர். பெருமளவில் அதிகரித்த யூதக் குடியிருப்புகளும் யூதர்களால் வாங்கப்பட்ட பண்ணை நிலங்களிலும் அவர்களுக்குச் சொந்தமான தொழிற்சாலைகளிலும் அரபியர்களை பணியமர்த்தாததும் அரபியர்களின் கோபத்தை அதிகரித்தன. இதையடுத்து அரபியர்கள் யூதர்களைத் தாக்கத் தொடங்கினர். ஆகஸ்ட் 1929ல் ஹெப்ரான் படுகொலை என்றழைக்கப்பட்ட சம்பவத்தில் 67 யூதர்கள் கொல்லப்பட்டனர்.


1936 முதல் 1939 வரை அரபியர் யூதர்களுக்கு எதிராக‌ கிளர்ச்சி செய்தனர். அரபியர்கள் கொடுத்த நெருக்கடியை அடுத்து பிரிட்டன் பாலஸ்தீனத்திற்கு குடியேறிக் கொண்டிருந்த‌ யூதர்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஆரம்பித்தது. இதையடுத்து பெரும்பாலான யூதர்களை சட்டத்திற்கு விரோதமாகக் குடியேறியவர்கள் என்று கருதப்பட வேண்டியதாயிற்று. இதனால் மேலும் பதட்டம் அதிகரித்தது. 1933 முதல் 1939 வரை ஐந்தாவது அலியா கால கட்டத்தில் யூதர்கள் நாஜிக் கட்சியினரின் அட்டகாசத்தால் ஜெர்மனியிலிருந்து குடியேறினர். 1941ல் லேஹி என்ற ரகசிய அமைப்பு அமைக்கப்பட்டது; பல்மாக் எனப்படும் அதிரடிப்படையும் அமைக்கப்பட்டது. 1944ல் பிரிட்டிஷ் ராணுவத்தின் ஒரு பகுதியாக யூத படைப் பிரிவு அமைக்கப்பட்டது.


பிரச்சினைகளை சமாளிக்க முடியாத பிரிட்டன், ஐ.நா. சபையிடம் தீர்வு காண வேண்டிக்கொண்டது. 1947, மே 15 ல் ஐ.நா. UUNSCOP என்ற கமிட்டியை அமைத்தது. இதில் 11 நாடுகளின் பிரதிநிதிகள் இருந்தனர். நடுநிலைமையை உறுதி செய்வதற்காக வல்லரசு நாடுகள் எதுவும் இதில் அனுமதிக்கப்படவில்லை.


ஐந்து வாரங்களுக்குப் பிறகு இந்தக் கமிட்டி தன் அறிக்கையை சமர்ப்பித்தது. இதன்படி பாலஸ்தீனம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி யூதர்களுக்கும் இன்னொரு பகுதி அரபியர்களுக்கும் கொடுக்கப்படவேண்டும். இந்த அறிக்கை ஐ. நா. சபையில் தீர்மானம் 181 வடிவத்தில் நவம்பர் 1947ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தீர்மானத்திற்கு 33 நாடுகள் ஆதரவாகவும் 13 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 10 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. அரபு லீக்கைச் சேர்ந்த அரபு நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த‌த் தீர்மான‌ம் அறிவிக்க‌ப்ப‌ட்ட‌வுட‌ன் பால‌ஸ்தீனிய‌ர்க‌ளுக்கும் யூத‌ர்க‌ளுக்கும் பால‌ஸ்தீன‌ப் ப‌குதிக‌ளைப் பிடிப்ப‌தில் க‌டும் மோத‌ல் ஏற்ப‌ட்ட‌து. 1948, மே 14 அன்று இஸ்ரேல் நாடு பிர‌கட‌ன‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து. ம‌றுநாளே அர‌பு நாடுக‌ள் இஸ்ரேல் மீது ப‌டையெடுத்த‌ன‌.


பின்குறிப்பு: இந்தக் கட்டுரை இஸ்ரேலிய வரலாற்றின் சுருக்கமே ஆகும். இதில் ஓட்டோமான் அரசின் தொடக்கக் காலம் வரையிலான ஆண்டுக் கணக்குகள் தோராயமானவை.




நன்றி: சகோதரர் ராபின் அவர்கள்

Post a Comment

0 Comments