| மத்தியகிழக்கு நாடுகளில் நடை பெற்று வரும் பிரச்சனைகளை தினந்தோறும் நாம் தொலைக்காட்சிகளில் காண்கிறோம். இலங்கையின் வடக்கு, கிழக்கில் நடைபெறுபவற்றை செய்தித்தாள்களில் வாசிக்கிறோம். சில இடங்களில் கொள்ளையர்களால் பலகோடி பணம் கொள்ளையடிக்கப் படுகின்றன. மக்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப் படுகிறார்கள். நாடுகளின் பொருளாதாரம் நாளுக்கு நாள் கீழ்நோக்கிச் செல்கிறது. இதன் மத்தியில் ஏழைகள் தள்ளாடுகிறார்கள். சுகாதாரத்திற்காகவும் மருத்துவ வசதிகளுக்காகவும் நோயாளிகள் நீண்ட வரிசையில் நிற்கிறார்கள். தொழிலற்ற பட்டதாரி மாணவர்கள் தொழிலுக்காக ஏங்கித் தவிக்கிறார்கள்.
அநீதி, நம்பிக்கையீனம், முரண்பாடுகள் ஆகிய வார்த்தைகளே இந்நாட்களை விளக்க போதுமானவை. கவலைதரும் விஷயம் என்னவென்றால் பிரச்சனைகள் வெளியில் மட்டுமன்றி, திருச்சபைக்குள்ளும் சங்கங்களுக்குள்ளும் ஏன் கிறிஸ்தவ குடும்பங்களுக்குள்ளும் காணப்படுகின்றன. அநேக கிறிஸ்தவ குடும்பங்கள் உடைந்து போயுள்ளன. பல இடங்களில் சண்டையுமில்லை, சமாதானமுமில்லை" என்ற சூழ்நிலை காணப்படுகின்றது. இவைகள் பிரச்சனைகள் சரியாக கையாளாதபடியினால் ஏற்படுகின்றன.
நீங்கள் எப்படி பிரச்சனைகளை சமாளிக்கிறீர்கள்? உதாரணமாக, ஒரு கொலை அச்சுறுத்தலுக்கு நீங்கள் இலக்காவீர் களானால் அதை எப்படி நீங்கள் சமாளிப் பீர்கள்? மோட்டார் துப்பாக்கி அல்லது குண்டுசத்தம் அருகில் கேட்குமானால் உடனே அந்த பிரச்சனையை எப்படி கையாளுவீர்கள்? எல்லா சூழ்நிலைகளும் தலைக்குமேலாக சென்று உங்கள் வாழ்க்கை யைக் குறித்த பயமும் திகிலும் ஏற்பட்டால் உடனே அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் உணர்வது என்ன?
சிலர், தேவன் தமது முகத்தை மறைத்து தன்னைவிட்டு விலகி சென்றுவிட்டதாக எண்ணுவார்கள். வேறு சிலர், தேவன் தமக்கு தீமையை அனுமதித்தமையால் தமது வாழ்வை குறித்து கோபப்படுவார்கள். சர்வவல்லமையுள்ளவர் மீது தமது நம்பிக்கையை இழந்தவர்கள், "தன் கையே தனக்குதவி" என நினைப்பார்கள்.
"சபையிலும் வீட்டிலும் நிறுவனத்திலும் நாட்டிலும் எவ்வாறு பிரச்சனைகளைக் கையாள்வது?" என்பதைக் குறித்து ஒரு குழுவில் கலந்துரையாடியபோது, வாழ்வை ஆதாரமாகக் கொண்டு பிரச்சனைகளைக் கையாளும்போது சில காரியங்கள் அவசியமானவைகளாகும் என்பதை கண்டு கொண்டோம். அவைகளாவன: ஜெபம், மற்றவர்களுக்கு செவிகொடுத்தல், அவர்களது வித்தியாசமான கருத்துக்களை ஏற்றுக் கொள்ளுதல், தெளிவான சட்ட நியதிகளைக் கொண்டிருத்தல், மன்னித்தல், பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவரத்தக்கதாக செயற்படுதல் ஆகியவைகளாகும்.
சரியான தொடர்பு மற்றும் உறவுகளைக் குறித்து இயேசுகிறிஸ்து உபதேசித்துள்ளார். பலியிடுவதையும் சேவைசெய்வதையும்விட சரியான உறவுகளை மகிழ்ந்து அனுபவித்தல் முக்கியமானவைகளாகும் (மத்.5:23-24). "அன்பில்லாத சேவைகளும் தான தர்மங்களும் ஒன்றுக்கும் பிரயோஜனமற்ற காரியம்" என பவுல் எழுதுகிறார் (1கொரி.13:1-3). நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஐக்கியத்தையே வலியுறுத்தியுள்ளார். மற்றவர்களோடுள்ள நமது ஐக்கியமே தேவனுடனான ஐக்கியத்தை பிரதிபலிப்பதாகும். மத்தேயு 5: 44-45 இல் இயேசு கூறினார்: "நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்". இந்தப்பகுதியில் இயேசுகிறிஸ்து தேவனின் நிகரற்ற அன்பைப்பற்றியும் தேவனுடைய பிள்ளைகள் தமது பிதாவினுடைய குணாதி சயத்தைப் பிரதிபலிக்க வேண்டியதின் அவசியத்தையும் குறிப்பிடுகிறார். ஆம், சரியான உறவு தேவனுக்கு மிகவும் முக்கியமானது.
பிரச்சனைகளைக் கையாள்வதைக் குறித்த சில ஆலோசனைகள்: முதலாவதாக முழங்கால் படியிடுங்கள்: தேவனுடைய பிள்ளைகளுக்கு ஜெபம் செய்வதே மிக பாக்கியமான காரியமாகும். இதுவே நாம் செய்யவேண்டிய முதலாவது காரியமுமாகும். பல்வேறுபட்ட பிரச்சனை களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருந்த பிலிப்பிய சபைக்கு பவுல் எழுதுவது என்ன வென்றால், "எல்லாவற்றையுங்குறித்தும் நீங்கள் விண்ணப்பம் பண்ணுங்கள்" என்பதேயாகும். மோசேயின் அன்றாட வழக்கங்களில் ஒன்று, அவர் வழிநடத்திச் சென்ற எபிரேய மக்கள் கொடுத்த சகல பிரச்சனைகளையும் தேவைகளையும் உடனே தேவசமுகத்திற்கு கொண்டுசெல்வது தான். ஒரு பாமாலை இவ்விதமாக கூறுகிறது:
" பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தானுண்டே, பாவபாரம் தீர்ந்துபோக மீட்பர் பாதம் தஞ்சமே, லோக துக்கம் துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால், துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால்".
இரண்டாவதாக எழுந்து நில்லுங்கள்:
சரியான ஆதாரமில்லாமல் ஒருவனை குறை சொல்வதோ, நியாயந்தீர்க்கவோ வேண்டாமென வேதாகமம் நமக்கு அறிவுரை வழங்குகிறது (மத்.7:1-5). அதேசமயம், மற்றவர்களை எவ்வாறு திருத்துவது என்பதைக் குறித்து தேவன் நமக்குக் கற்பிக்கிறார். யோவான் 8-ல் இயேசுவானவர் விபச்சாரத்தில் பிடிப்பட்ட பெண்ணை நீதியாகவும் கௌரவமான முறையிலும் திருத்துகின்றார். தம்மை பின்தொடர்ந்து வந்தவர்களிடங்கூட, தேவனுக்குக் கீழ்ப்படி வதைவிட தங்கள் இனத்தைக்குறித்து பெருமை பாராட்டியவர்களை மிகவும் கடினமாக கண்டித்தார். அப்படியாக அவர் அவர்களின் மனங்களைத் திருத்துகிறார் (யோவான் 8:41-47). இயேசு, ஒருவரை எப்படி திருத்துவது என்பதைக் குறித்த பிரமாணங்களை மத்தேயு 18:16-17 இல் எடுத்துக்கூறுகிறார். சாட்சிகளுடனும் ஆதாரங்களுடனுமே பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். பிரச்சனைகளைக் கையாளும்போது சரியான காரியத்திற்காக எழுந்து நிற்பது அவசியமானதாகும்.
மூன்றாவதாக விலகி நடவுங்கள்:
ஒருவன் தொடர்ந்து பிடிவாதமாக தவறான வழியில் செல்வானென்றால் நாம் விலகி நடக்க வேண்டுமென்பதாக நமதாண்ட வராகிய இயேசு கற்பித்தார். அதைக்குறித்து இவ்விதமாக கூறினார். "பரிசுத்தமானதை நாய் களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துக் களைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திருப்பிக்கொண்டு உங்களைப் பீறிப் போடும்"(மத்.7:6). திருமணம் அல்லது சபை யில் ஏற்படும் பிரச்சனைகளினால் அதனை முறித்துகொண்டு அதைவிட்டு வெளியேறு வதை இது குறிக்காது. நாம் அந்த பிரச்ச னைக்கு காரணகர்த்தாவாகாமலும் இடறலை உண்டுபண்ணாமலும் இருத்தல் அவசியம் என்பதையே இது குறிக்கிறது (மத்.18:7).
நான்காவதாக சத்தியத்திற்காகப் போராடுங்கள்:
நாம் பிரச்சனைகளைக் கையாளும்போது, உண்மைக்காக தைரியமாக எதிர்த்து நின்று போராடுவது மிக அவசியமானதாகும் (மத்.18:7, பிரசங்கி 3:8). அதாவது சில காரியங்களில் எதிர்த்து போராடாவிட்டால், அவை அநேகரின் நல்வாழ்வை அழித்து பாழாக்கும். கடந்த காலங்களில் திருச்சபை வரலாற்றில் சத்தியங்களுக்காகவும், நீதியில் கலப்பில்லாதிருக்கவும், அக்கிரமங்கள், பயமுறுத்தல்கள் ஆட்சியாளரின் பயம் ஆகிய விஷயங்களுக்காக திருச்சபை எதிர்த்து நின்ற துண்டு. பிரச்சனைகளைக் கையாள்வதில் கிறிஸ்தவ முறையானது ஒருபக்க கண்ணையோ, காதையோ, வாயையோ அடைத்து விடுவதல்ல. உங்கள் தலைகளை உயர்த்தி சரியாக நீதி செய்யும்போது பாதிக்கப்படுகிறவர்களும் நாளைய தினத்தில் சந்தோஷமாயிருப்பார்கள். ஆகவே, பிரச்சனைகளைக் கையாளும் போது ஜெபித்தலும் (முழங்காற்படியிடுதல்), எழுந்து நிற்பதும் (தைரியமாக), விலகி நடப்பதும்,சத்தியத்திற்காகப் போராடுவதும் அவசியமாகும். இவையனைத்தையும் நாம் கிறிஸ்துவுக்காக செய்ய வேண்டுமேதவிர, நமது சொந்த சுயநலத்திற்காக செய்யக் கூடாது. நாம் தரிசித்தல்ல, விசுவாசித்து நடக்கிறவர்களாய் இருப்போமாக. நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக் குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான். மேலும் நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாய சனத்திற்கு முன்பாக நிற்போமே (ரோ.14:10-12).
|
0 Comments