Header Ads Widget

Responsive Advertisement

கிறிஸ்தவர்கள் காதலிப்பது சரியா? தவறா? ஓர் அலசல்


கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்...  இன்றைய சமுதாயச் சூழ்நிலையில் காதல் என்பது வாலிபப் பிள்ளைகள் மத்தியில் ஒரு நாகரீக அடையாளமாகவும், பொழுதுபோக்காகவும், பருவக்கோளாரினால் உண்டான மோகமாகவும் பரவலாக இருக்கிறது. அது சரியா? தவறா? என்று வேதவெளிச்சத்தில் தியானிப்போம்...

காதல் என்றால் என்ன?
அதற்கு முன்னால் காதல் என்றால் என்னவென்று சற்று நிதானிப்போம்.. தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் அன்பு என்ற சுபாவமும், பாலுணர்வு என்ற சுபாவமும் கலந்து எதிர்பாலர்கள் மீது உண்டாகும் ஒருவித ஈர்ப்பே பொதுவாக நம்முடைய தமிழ் சமுதாயத்தில் காதல் என்ற வார்த்தை கற்பிக்கப்படுகின்றது. கனவனைக் காதலிப்பது, மனைவியைக் காதலிப்பது, மணம் செய்துகொள்ளப்போவோரைக் காதலிப்பது. உடன் பணியாளரைக் காதலிப்பது, உடன் படிப்போரைக் காதலிப்பது. பக்கத்து வீடு, அடுத்தவீடு எதிர் வீடு பக்கத்து ஏரியா, மற்றும் இனையக் காதல் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகலாம்...

உலகத்தின் பார்வையில் காதல்
உலகத்தின் பார்வையில் காதல் என்பது ஆரோக்கிய மனப்பான்மையில் பொதுவில் சரியானதாகவே பார்க்கப்படுகின்றது. ஒருவருக்கொருவர் சரியான புரிதலில் வரும் காதல், சாதி மதம் இனம் மொழி பொருளாதார வேறுபாடுகள் கடந்து வெற்றிபெறுகின்றன, சில தோல்வியும் அடைகின்றது. ஆனால் பொதுவாகப் பார்த்தால் காதல் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சமூக செயல்பாடே என்று அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது

கிறிஸ்தவக் காதல்
இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற கிறிஸ்தவர்களாகிய நாம் இந்த உலத்தின் போக்கோடு எளிமையாக காதலில் காதலில் விழுந்துவிடுகின்றோம். அல்லது காதலில் விழத் தூண்டப்படுகின்றோம்.. பலர் உலகத்தார் போலவும், சிலர் ஆலயத்தில் வாலிபர் கூடுகை, ஞாயிறு பள்ளி, ஜெபக்குழுக்கள், பாடகர் குழு என்ற எல்லாவற்றிலும் தேவ நாம மகிமைக் கென்று கூடுவதைக் காட்டிலும் எதிர்பாலரைக் கவரவேண்டும் என்ற வாஞ்சையில் கூடுவோர் அனேகம் பேர்.

இதிலும் ஆண்டவர் தரிசனத்தில் அந்தப் பெண்ணைக் காட்டினார், இவன் கிறிஸ்துவுக்குள் சரியாக இருக்கின்றான், ஆகவே இவன் என் வாழ்க்கைத் துனையாக வரவேண்டும் என்று காதலுக்கு ஆவிக்குரிய சாயம் பூசி அதை ஆண்டவருக்குச் சிந்தம் என்று சொல்ல முயல்கிறோம்.

காதலைக் குறித்து கிறிஸ்தவம் என்ன சொல்லுகின்றது,
கிறிஸ்தவம் கனவன் மனைவிக்கு இடையிலான அன்பு கூறுதலை கனமானது, பரிசுத்தமானது, என்று விவரிக்கிறது, தன் சொந்த சரீரமாக பார்க்கவும் பராமரிக்கவும், நடத்தவும் சொல்லியிருக்கிறது, ஆனால் அது கனவன் மனைவிக்கு இடையிலான காரியமே அல்லாமல் திருமனத்திற்கு முந்தைய அல்லது திருமனத்திற்கு பிந்தைய காதலை விமர்சித்து எதுவும் சொல்லப்படவில்லை. அப்படியானால் காதலிப்பது சரியா தவறா என்று எப்படி அறிந்துகொள்வது என்ற குழப்பம் தேவையில்லாதது, இதை அடுத்துவரும் பத்திகள் தெளிவாக விளக்கும்.

காதலிக்கும்போதான மனோபாவம்,
நம்மில் எல்லோருமே நிச்சயமாக காதல், அல்லது எதிர்பாலின ஈர்ப்பு என்ற ஏதாகிலும் ஒன்றையாவது நம்முடைய ஏதோ ஒருவகையில் கடந்து வந்திருப்போம், அந்தக் கால கட்ட மனோபாவம் இன்றைய வாலிபப் பிள்ளைகளுக்கு விளக்கிச் சொல்லவேண்டுவதில்லை. அவர்களைப் பார்க்க வேண்டும், பேசவேண்டும், போனில் பேச வேண்டும், மெசேஜ் அனுப்ப வேண்டும், பேஸ்புக்கில் சேட்டவேண்டும், எப்போதும் அவர் நினைவாகவே இருக்கவேண்டும், என்று தோண்றிக்கொண்டே இருக்கும். இதை யாருமே மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை இப்படிபட்ட உணர்வுகள் எனக்கு ஏற்பட்டதில்லை ஆனாலும் நான் உயிருக்குயிராக காதலித்தேன், காதலிக்கிறேன், என்று சொல்வீர்களாயின் நிச்சயம் ஏதோ கோளாறு உடனடியாக வைத்தியரைப் பார்க்கவும். அல்லது பொய் சொல்கிறீர்கள் என்று பொருள். இந்த மனோபாவம் பொதுவாக பதின் பருவம் மற்றும் 20களின் தொடக்கங்களில் 99% மனிதர்களுக்கு நிச்சயமாக இருக்கும், இருந்திருக்கும். அந்த வயதினரை மனதில் வைத்தே இந்தக் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது என்பதை மனதில் நிருத்தவும்.


காதலிக்கும் மனோபாவமும் கிறிஸ்தவமும்,
மேற்சொன்ன மனோபாவத்தை வேத வெளிச்சத்தில் ஆராயவேண்டியது மிகவும் அவசியம், காரணம் இந்த மனோபாவம் காதலிப்போரை தற்கொலை, கொலை, கீறிக்கொள்ளுதல், காதலிக்க மறுப்போரை, அல்லது பிரிந்தோர் மீது தாக்குதல் நடத்துதல் போன்ற தீய செயல்களைச் செய்ய ஊக்கமளிக்கிறது என்று அறிய வேண்டியது எதார்த்த உண்மையாகும். இது மிக மிக அரிதாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கிறதாக இருந்தாலும், இந்த மனப்பான்மை இயேசு கிறிஸ்துவின் எதிர்ப்பார்ப்புகளில் ஒன்றை நம்மையும் அறியாமல் மீறும்படி செய்து விடுகின்றது.

கிறிஸ்துவின் எதிர்பார்ப்புக்கு முரன்படும் காதல் மனப்பான்மை
என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் மற்றவர்களை நேசிப்பவன் எனக்குப் பாத்திரன் அல்ல.(மத்தேயு 10:37) என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நேரடியாகவே சொல்லியிருக்கிறார். இன்று எத்தனை தேவ பிள்ளைகள் தன் காதலரின் மேல் கிறிஸ்துவைக் காட்டிலும் அதிகமாக நேசித்து பைத்தியமாக இருக்கின்றீர்கள்? என்ற கேள்வியை உங்கள் இருதயத்தில் கேட்டால் இல்லையில்லை நான் இயேசுவைக் காட்டிலும் குறைவாகவே என் காதலரை நேசிக்கிறேன் என்று சொல்லக்கூடும், ஆனால் ஒருவர் உங்களிடம் வந்து தேவன் அவர் உனக்கு சித்தமில்லை என்று சொல்லச் சொல்வதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள், அந்தச் சூழ்நிலையில் அவர்களை விட்டு விட உங்கள் முழு இருதயமும் சம்மதிக்குமா? ஒருவேளை அப்போது சரி என்றாலும், ஒருநாள், ஒருவாரம், ஒருமாதம் கழித்து எடுத்த முடிவு தவறோ என்ற எண்ணம் உருவாகுமா? உருவாகாதா? என்று நிதானித்துப் பார்த்தால் நிச்சயம் இல்லை என்றுதான் மனசாட்சிக்கு உண்மையான பதில் வரும். ஆகவே தேவனுடைய இடத்தை திருடும் திருடனின் திட்டமே காதல் என்பதை அறிந்துகொள்.

தேவ பிள்ளையைக் காதலிக்கலாமா?
நல்லக் கேள்வி பொதுவாக காதலிப்பவர்கள் நான் நல்ல விசுவாசியான பிள்ளையைத்தான் காதலிக்கிறேன். நாங்கள் திருமணம் செய்து கொண்டு ஆண்டவருக்கென்று ஊழியம் செய்வோம் என்று சொல்லித் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளக்கூடும். உண்மை என்னவெனில், முன்பே சொன்னது போல சுய இச்சைக்கு தேவ சாயல் பூசும் முயற்சி இது, வெளிப்படையாகச் சொல்வதானால் ஆண்டவரே இவனை(அ) இவளை எனக்கு மனைவியாகத் தாரும் என்று சுய சித்தத்தை தேவசித்தமாக மாற்ற போராடி ஜெபித்து தேவனுடைய விருப்பத்தைக் காட்டிலும் சுய விருப்பத்திற்கு எப்பாடு பட்டாவது தேவனை சம்மதிக்கச் செய்துவிட வேண்டும் என்ற கேவலமான சுயநலம் அதில் அடங்கியிருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். உங்களிடம் யாராவது நீ கிடைக்க வேண்டும் தேவனிடத்தில் மன்றாடி கேட்டுக்கொண்டேன் அதனால் தான் நீயும் சம்பதித்திருக்கிறாய் என்று சொல்வார்களாயின் தேவ திட்டம் என்ற போலியான போர்வையில் உங்கள் மீதுள்ள மோகத்தால் தங்கள் சுய திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று எளிமையாக அறிந்துகொள்ளலாம். அப்படி யாராவது உங்களை ஏமாற்றியிருப்பார்களாயின் அதில் நீங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறீர்கள் உடனே அதை விட்டு வெளியேறவும், அது சாத்தானின் திட்டம்..

காதலின் உண்மை முகம்.
தற்காலக் காதல்கள் இரகசிய பாலுறவு வரை சென்று திருமணத்துக்கு முந்தைய கற்பமாதல், கருக்கலைப்பு போன்றவற்றைச் செய்து விபச்சாரம், மனுச கொலைப்பாதகம் போன்ற பாவத்தைச் செய்யக் காரணமாகி விடுகிறது. நீ கருக்கலைப்பு செய்திருக்கின்றாயா? அப்படியெனில் நீ கொலைப்பாதகனாய் இருக்கின்றாய், கருக்கலைப்புக்குக் காரணமாய் இருந்திருக்கின்றாயா நீயும் கொலைப்பாதகனே உனக்குள் நித்திய ஜீவன் இல்லை என்று வேதம் சொல்லுகிறது ஆம் நீ அதற்கு மன்னிப்புப் பெறாமல் நிச்சயம் பரலோகம் போகமாட்டாய் நரகத்துக்குத்தான் போவாய் இதை வேதம் தெளிவாக(I யோவான் 3:15) சொல்லியிருக்கிறது. இது போன்ற சமூக அவலங்களுக்குக் காரணமாகும் காதல் தேவையா?


மனுசனை நம்புதல் காதலின் குணம்
காதலிப்பவர்கள் தன் துணையின் வார்த்தைகளை அதிகமாக நம்பியிருப்பார்கள், நான் உன்னைக் காலத்துக்கும் வைத்துக் காப்பாற்றுகிறேன், உயிருள்ளவரை நேசிப்பேன், என்றெல்லாம் மனித வாக்குறுதியை நம்பி தன் இருதய இச்சைக்கு வலிமை தேடிக்கொள்கிறார்கள், ஆனால் வேதமோ நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதைவிட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்.(ஏசாயா 2:22) என்று எதிர்க்கேள்வி கேட்கிறது, அதே போல எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.(ரோமர் 3:4) என்றும் நமக்குக் கற்பித்திருக்கிறது, அப்படியானால் நாம் நம் காதல் துனையின் பொய் வார்த்தைகளை நம்புகிறோம் என்றுதானே அர்த்தம்? உன் வாழ்நாளெல்லாம் உன்னோடு உனக்காக நானிருப்பேன் என்று உன் கைகளைப் பிடித்துக் கொண்டு சொல்பவன் திருமணமாகி வரும்போது விபத்தில் அடிப்பட்டு சாகமாட்டான் என்று உனக்கு எப்படித்தெரியும்? காரணம் உன்னால் மனிதனுடைய முகத்தை மட்டுமே பார்க்க முடியும் என்பதை நினைவில் நிறுத்து..

பொய்யனின் உச்சகட்ட ஏமாற்றும் திட்டமாக காதல் மாறக்கூடும்
தேவ பிள்ளையைக் காதலிக்கலாம் என்று சொல்லுகிறவர்கள் பொதுவாக அந்த குறிப்பிட்டவரின் வேத வாசிப்பு, ஜெபம் போன்றவற்றைப் பார்த்து நம்பி ஏமாறக்கூடும் ஏனெனில் அடுத்தவரைக் கவரவேண்டும் என்ற திட்டத்தில் போலியாக அந்த நபர் நடிக்கக்கூடுமே? மேலும் மகா மோசடியான ஒன்றும் இதில் அடங்கியிருக்கிறது, கிறிஸ்தவனல்லாதவன் ஒருவன் வந்து காதலிப்பதாகச் சொன்னால் உடனே இந்த விசுவாசி என்ன செய்வார் தெரியுமா? நீ கிறிஸ்தவனாகு என்று போதிக்கும் அவனும் இவர் மீதுள்ள கிறக்கத்தில் கிறிஸ்தவனாகும் சடங்காச்சாரமான ஞானஸ்நானம் போன்ற வற்றைச் செய்துவிட்டு வந்து திருமணம் செய்து காரியம் ஆனவுடன் தன் பழைய வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடும் இப்படி பலருடைய வாழ்க்கை ஏமாற்றம் கண்டிருக்கிறது என்பது கசப்பான உண்மையாகும்...

அப்படியானால் என்னதான் செய்வது?
எனக்கன்பான தேவ பிள்ளையே.. உன்னுடைய பாலுணர்வைக் கொடுத்தவர் ஆண்டவர், மேலும் அவர் உன்னைத் தனிமையாக இருப்பது நல்லதல்ல என்று உனக்கு ஏற்ற துனையை உனக்கு நிச்சயம் ஏற்படுத்தியிருப்பார். அவர் சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவர் என்று வேதம் சொல்லுகிறது, பிறந்த குழந்தைக்கு ஒரு தாய் அரிசி சாதம் கொடுக்கத் துணிவாளோ? அப்படியே உனக்கான தகுதிவரும் வரை தேவன் தரமாட்டார் என்பதை நினைவில் கொள். நீ தேடி அலைந்தால் அதனால் வரும் துன்பத்திற்கு நீதான் ஆளாகவேண்டும் என்பதை நினைவில் கொள். இது எப்படியாகும்? என் சூழ்நிலைகள் எல்லாம் எனக்கு எதிராக இருக்கின்றதே? என்று சூழ்நிலைகளுக்கு அடுத்த நெருக்கத்தில் தவிக்கக்கூடும் கலங்காதே, கர்த்தர் மேல் திட நம்பிக்கையாயிரு.. நீ அறியாததும் நினைத்துக் கூடப் பார்க்காத வழியில் தேவன் செயல்பட ஆரம்பிப்பார். கடினமானதுதான் ஆனாலும் அவரிடத்தில் காத்திரு, அதைத்தவிர சரியான வழி எதுவும் இல்லை என்பதை நினைவில் கொள்.

காதலிலிருந்து தப்பிப்பது எப்படி?
காதல் முன்பே சொன்னது போல காதல் நம்முடைய சமுதாய அமைப்பில் பழகிப்போன அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும், தேவ பிள்ளைகளாகிய நாம் எல்லாக் காவலோடும் நம்முடைய இருதயத்தைக் காத்துக்கொண்டு தப்பிக்க முடியும், எந்த ஒரு காதலும் நினைவுகளின் திரட்சியால் தான் வலிமையாகும், ஆகவே அதுபோன்ற நினைவுகளுக்கு இடம் கொடுக்காதே, அந்த நினைவுகளைத் தூண்டும் நண்பர்களோடு சேராதே, சுருக்கமாக உன் மனதில் காதல் குறித்த நினைவுகளுக்கு இடம் கொடுக்காமலிருந்து ஜெபத்தில் உறுதியாய் இருப்பாயாகின் நிச்சயம் காதலிலிருந்து தப்பிக்க முடியும்...

முடிவாக..
காதல் என்பது உலகத்தின் பார்வையில் எப்படிப்பட்டதாக இருந்தாலும், கிறிஸ்தவத்தின் பார்வையில் தவறே.. என்று சொல்லி இந்தப்பதிவை நிறைவு செய்கிறேன் நன்றி

Post a Comment

0 Comments